வெந்தய கீரை பயன்கள்
கீரை சாதம் செய்ய உகந்தது வெந்தயக் கீரையாகும். நீரிழிவை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
இடுப்புவலி, கைகால் அசதி, மார்பு வலி, வயிற்றுப் புண்ணையும் போக்கும். பொங்கலுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, உள்ளவர்கள் வெந்தயக் கீரை உண்ணக் கூடாது. இதில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது.
மேலும் வெந்தயக் கீரை உண்பதால் மலடு, சூதகக்கட்டு நீங்கும். சூதகம் முறையாகும். கர்ப்ப நோய்கள் குணமாகும்.
வாய்ப் புண், வாய்நாற்றம் போகும். உமட்டல் நீங்கும். சீரணம் சரியாகும். மலக்கட்டு நீங்கும். புளி ஏப்பம் போகும். குடற்சூட்டைத் தணிக்கும். மூலப் புண் ஆறும். உடல் கனங்குறையும். மேனி பொலிவு பெறும்.
வெந்தயக் கீரையை அவித்து துவரம் பருப்பு தேங்காய், காரம் உப்பு சேர்த்துச் சோற்றில் கலந்து சாப்பிடலாம். வயிற்றுச் சூடு, வாய் துர்நாற்றம் நீங்கும். வியர்வை துர்நாற்றம் வயிற்றுப் பூச்சி ஒழியும். மாத விலக்கின்போது உடல்களைப்பு தீரும்.
வெந்தயக் கீரையில் உள்ள சத்துக்கள்
ஈரம் – 86.1 கிராம்
புரதம் – 4.4 கிராம்
கொழுப்பு – 0.9 கிராம்
தாது உப்புக்கள் – 1.5 கிராம்
சர்க்கரைச் சத்து – 6.0 கிராம்
நார் – 1.1 கிராம்
சக்தி – 49 Kcal
சுண்ணாம்புச் சத்து- 395 மி.கி.
பாஸ்வரம் – 51 மி.கி.
இரும்பு – 16.5 மி.கி.
மாவுப் பொருள் – 2340 UG
தையமின் – 0.04 மி.கி.
ரிபோஃபிளேவின் – 0.31 மி.கி.
நியாசின் – 0.8மி.கி.
வைட்டமின் சி – 52 மி.கி.
பருப்புக் கூட்டு வைப்பது எப்படி?
300 கிராம் வெந்தயக் கீரையை அலம்பி மெல்லியதாய் அரிந்துகொள்ளவும்.
50 கிராம் பயத்தம் பருப்பில் நெய்விட்டு வறுத்து அதில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு வெந்தயக் கீரையை போட்டு அதை நன்றாக வேக வைக்கவும்.
பின்னர் 3 மிளகாய் வற்றல், 6 மிளகு, 1 ஸ்பூன் தனியா, மஞ்சள் கடலைப் பிரமாணம், 1 பத்தை கொப்பரைத் தேங்காயை நெய்விட்டு வறுத்து அரைக்கவும்.
எலுமிச்சை அளவு புளியையும் அரை தேக்கரண்டி உப்பையும் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அவற்றை கீரையில் கொட்டி மூடவும்.
முதல் கொதி வந்தவுடன் அரை மூடி தேங்காய்பால் சேர்த்து தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து டீஸ்பூன் நெய்விட்டு 40 கிராம் அரிந்த வெங்காயம் கால் தேக்கரண்டி சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும் கீரையை கொட்டவும் 1 ஸ்பூன் கறிமாப் பொடி போட்டு கொத்தமல்லித் தழை போட்டு நன்றாகக் கடையவும் மூடிவைத்து சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும்.
தயிர்க் கூட்டு செய்வது எப்படி?
300 கிராம் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கவும். 100 மில்லி நல்லெண்ணெயில் அதை பொரிக்கவும்.
50 கிராம் கொத்தமல்லி 4 மிளகாய் வற்றல் 100 கிராம் வெங்காயம், 40 கிராம் தேங்காய், 2 ஸ்பூன் பொட்டுக்கடலை, 1/2 ஸ்பூன் கசகசா, 10 சோம்பு, 3 கிராம்பு, 1 ஏலக்காயை நெய்யில் வறுத்து அரைத்தெடுக்கவும்.
50மில்லி தயிர், 1/4 லிட்டர் தண்ணீர் 2 ஸ்பூன் உப்புபோட்டு, கரைத்து 100 கிராம் வெந்தயக் கீரை அரிந்து உப்பு சிறிதளவு போட்டு தண்ணீரில் அலசி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
தானிதம் செய்யும் பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய்விட்டு வெங்காயம் அரிந்து, பட்டை, சோம்பு சிறிது, கிராம்பு, ஏலக்காய் போட்டு சிவக்க பொரியவிடவும்.
பின் வெந்தயக் கீரையைப் போட்டு வதக்கவும். பின் தயிருடன் சேர்த்து வைத்த மசாலைத் தாளிப்பில் கொட்டி மூடி வைத்து, கொதிக்கவிடவும். வறுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளைப் போட்டு எலுமிச்சம்பழசாறு பிழிந்து இறக்கவும்.
வெந்தயக் கீரை புளிக் கறி செய்வது எப்படி?
400 கிராம் வெந்தயக் கீரையை அலசி அரிந்துகொள்ளவும். 50 கிராம் நெய்யில் 80 கிராம் வடகம் வறுத்துப்
பொடியாக்கவும். மீதம் இருக்கும் நெய்யில் அரிந்த வெங்காயம் 3 தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை போடவும். பிறகு, அலசி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை தாளிதத்தில் போட்டு, உப்பு அரை தேக்கரண்டி நீரில் கரைத்துவிடவும்.
கீரை வெந்தபின் கீரையிலிருக்கும் நீரை வடித்துவிட்டு. 3. மிளகாய் வற்றல், 6 மிளகு, 1 பத்தை கொப்பரைத் தேங்காய், 1 ஸ்பூன் கொத்தமல்லி, மஞ்சள் கடலைப்பிரமாணம் ஆகியவற்றை நெய்யில் வறுத்து நைசாக அரைத்து கொட்டைப் பாக்கு பிரமாணம் புளியை 100 மி.லி. நீரில் கரைத்து, அரைத்து வைத்த மசாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் தாளிப்பு பாத்திரம் வைத்து 2 ஸ்பூன் நெய்விடவும்.
அது காய்ந்ததும் 40 கிராம் வெங்காயம் அரிந்து போட்டு, கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்ததும், தயாரித்து வைத்த கீரையையும் வடகப் பொடியையும் போட்டு கரண்டியால் புரட்டவும் பின் இறக்கிவிடவும்.
வெந்தயக் கீரை சாதம் செய்வது எப்படி?
ஐநூறு கிராம் வெந்தயக் கீரையைக் நன்றாக பொடிப் பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.
100 கிராம் வெந்தயக் கீரையை பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் நீர்விடவும். 10 கிராம் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு அடுப்பில் வேக வைக்கவும்.
கீரை வெந்ததும் இறக்கி நீரை வடிக்கவும். பிறகு, கீரையை நன்றாய்க் கசக்கிப் பிழிந்து உதிர்த்து எடுக்கவும்.
40 கிராம் உளுந்துப்பருப்பு 10 கிராம் மிளகாய் வற்றல் 1/4 தேக்கரண்டி சீரகம், 5 கிராம்பு, சாதிக்காய் மொச்சை பிரமாணம், சாதிபத்திரி சிறு துண்டு, 1/4 தேக்கரண்டி மிளகை வறுத்துப் பொடியாக்கவும்.
இதில் 20 கிராம் தேங்காய்த் துருவல், 50 கிராம் உப்புத் தூள் போட்டுக் கலந்துகொள்ளவும். பின்பு 400 கிராம் பச்சரிசியை சாதமாக்கி தாம்பாளத்தில் போட்டுக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 100 கிராம் நெய்விட்டு, காய்ந்த பின் 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1/4 தேக்கரண்டி கடுகு, 4 மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டுத் தாளிதம் செய்யவும்.
பிறகு தயாரித்திருக்கும் வெந்தயக் கீரையை அதில் வதக்கி அதைத் தாம்பாளத்தில் வைத்த சாதத்தில் போட்டுப் பிசிறி ஒரு எலுமிச்சம் பழத்தை அதில்பிழிந்து கிளறிவிடவும். சிறிது அனலில் வைத்திருந்து பிறகு இறக்கி வைத்து சூடாக சாப்பிடவும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்
6 Comments
Comments are closed.